காவல் நிலையத்தில் தீக்குளித்த சிறைகாவலர் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

police suicide

முதல் நிலை சிறக்காவலருக்கு ஏற்பட்ட நிலப் பிரச்சனை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 45 வயதான ராஜா என்பவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக முத்து அளித்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். 

 நாற்காலியோடு எட்டி உதைத்து தாக்கிய உதவி ஆய்வாளர்

இதற்கிடையே ராஜாவுக்கும் அவரது தம்பியான நிர்மல் என்பவருக்கும் குடும்ப பிரச்சனை நிலவி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மது போதையில், ராஜா வீட்டுக்கு சென்ற நிர்மல் அவரது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜா மற்றும் அவரது மனைவி விஜயா லால்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு வந்த ராஜாவை உதவி ஆய்வாளர் பொற் செழியன் என்பவர் தரக்குறைவாக நடத்தியதாகவும், நாற்காலியோடு எட்டி உதைத்து தாக்கியதுடன் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜா மீண்டும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.  

காவல்நிலையத்திற்கு முன் தீக்குளிப்பு

அப்போது கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 84 சதவீத தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டடார். அங்கி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இதனை விசாரித்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்  பரிந்துரையின் பெயரில் உறவினர்களுக்கிடையே உள்ள சொத்து பிரச்சனை மற்றும் அடிதடி வழக்கில் சரிவர விசாரணை செய்யாத உதவி ஆய்வாளர் பொற் செழியனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.