ஜெ., 6 ஆம் ஆண்டு நினைவு தினம்… 4 ஆக சிதறி அஞ்சலி செலுத்திய அதிமுக..!

Jayalalithaa

அதிமுகவின் ஒற்றை தலைமையாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அதிமுக 4 ஆக சிதறி அவருக்கு அஞ்சலி செலுத்தும் அவலத்தை கண்டு கட்சித் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

ஜெ., மறைவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

மரணத்தில் மர்மம்

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை  நடைபெற்று வந்தது. இந்த ஆணையம்  விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டது.

உண்மையை உடைத்த அறிக்கை

இந்த அறிக்கையானது ஜெ.,வின் மரணம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா டிச.,4 ஆம் தேதியே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஒற்றை தலைமை சர்ச்சை

ஜெ., மறைவிற்கு பிறகு அதிமுக இரட்டை தலைமை கொண்ட கட்சியாக மாறியது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் இணைந்து கட்சியை வழி நடத்தினர். இருந்தும் ஒற்றை தலைமை சர்ச்சை என்பது இவர்களுக்கிடையே அடங்காத நெருப்பாகவே இருந்தது. இந்த நிலையில் தான், அதிமுக ஒற்றை தலைமை சர்ச்சை பெரும் எரிமலையாக வெடித்தது. இபிஎஸை ஆதரித்து ஒரு கோஷ்டியும், ஓபிஎஸை ஆதரித்து ஒரு கோஷ்டியும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டன. 

சசிகலா எண்ட்ரி

சசிகலாவோ சிறையில் இருந்து வந்தவுடன், அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறார். ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை வெடிக்க தொடங்கியவுடன், அந்த சூழலை சசிகலா பயன்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு ஒன்றும் கிட்டவில்லை. 

4 ஆக பிரிந்துள்ள அதிமுக

இந்த நிலையில், ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அதிமுக 4 ஆக பிரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. இபிஎஸ் கோஷ்டி ஒருப்பக்கமும், ஓபிஎஸ் கோஷ்டி ஒரு பக்கமும், சசிகலா ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், டிடிவி தினகரன் அணி மற்றொரு பக்கமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சோகத்தில் தொண்டர்கள்

ஒற்றைத் தலைமையாக அதிமுக கட்சியை கட்டிக் காப்பாற்றிய ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, இக்கட்சி 4 ஆக பிரிந்துள்ளது தங்களுக்கு வருத்தமளிப்பது மட்டுமல்லாமல், இனி அதிமுகவின் எதிர்காலம் என்னவாகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வியும் குழப்பமும் இருப்பதாக அதிமுக உண்மை விசுவாசிகள் கூறுகின்றனர்.