ஜெயலலிதா சொத்து விவகாரம்.. கர்நாடகாவில் பரபரப்பை கிளப்பிய ஜெ.தீபா.!

deepa

 

கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொது ஏலத்தில் விட வேண்டும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கிலான பொருட்கள் கர்நாடகாவில் உள்ள கருவூலத்தில் உள்ளது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு அபராதத்தொகை விதிக்கப்பட்டு தண்டனை காலமும் முடிந்திருக்கிறது. இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் இருப்பதாகவும், அதை முறைப்படி பொது ஏலத்தில் விட வேண்டும் என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர்  நரசிம்ம மூர்த்தி என்பவர் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

விசாரணை

இந்த கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்றம், கர்நாடகா அரசை சொத்துக்களை கையாள்வதற்காக வழக்கறிஞரை நியமனம் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடகா அரசும் வழக்கறிஞரை நியமித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் வழக்கறிஞர் தரப்பில் பொருட்களை பொது ஏலத்தில் விடுவதா என்று வாதங்கள் வைக்கப்பட்டது. 

ஜெ.தீபா மனு தாக்கல்

இதனையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ. தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கோடிக்கணக்கான சொத்துக்களை நான் தான் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்தநிலையில், இந்த வழக்கு வரும் 26-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொத்து என்பதால் கர்நாடகா கருவூலத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படுமா இல்லை ஜெ.தீபாவிற்கு ஒப்படைக்கப்படுமா என்பதை வரும் விசாரணையில் பார்க்கலாம்.