9 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் கலைஞரின் தமிழ் தொண்டு ..!!

kalaingar

பள்ளி பாடப்புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செம்மொழியான தமிழ் மொழி

இன்று சட்டமன்றத்தின் நிகழ்ந்த மானிய கோரிக்கையின்போது, பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்கு குறித்து பாடதிட்டத்தில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.  ’செம்மொழியான தமிழ் மொழி’ என்கிற தலைப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம் பெறும் என்று அவர் கூறினார்.

வரும் கல்வியாண்டு முதல் இடம்பெறும்

முன்பு திமுக ஆட்சி செய்த காலத்தில், கலைஞர் கருணாநிதி எழுதிய செம்மொழி பாடல் ஏற்கனவே பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு இடம்பெறாத நிலையில் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து பாடதிட்டத்தில் இடம் பெற உள்ளதாகவும், வரும் கல்வியாண்டில், 9ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த பகுதி இடம் பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதலே இந்த பாடப் பகுதி இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான பாடப் பகுதி இறுதி செய்யப்பட்டு அச்சடிக்கும் பணியில் உள்ளது. இந்த ஆண்டு 9ம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் வழங்கும்போது, கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தொகுப்பும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.