கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு.. முக்கிய சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம்!

cabinet

கர்நாடக முதல்வராக பதவியேற்கும் சித்தராமையா

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இன்று பதவியேற்க இருக்கிறார்கள். பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு கட்ட தேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை தர இருக்கிறார்கள். 

அமைச்சரவை பட்டியல் வெளியீடு 

ஒரு நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வர் பதவிக்கான தேர்வு நடந்து முடிந்தநிலையில், அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், தற்போது முதல்கட்ட அமைச்சரவைப் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி ஏற்க உள்ள நிலையில், 8 பேர் அடங்கிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 

முக்கிய சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம்

முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே, மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.கே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி, ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். அமைச்சரவையில் லிங்காயத் அமைப்பு, தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் அமைச்சரவை பட்டியலில் புதிய எம்.எல்.ஏக்கள் யாரும் சேர்க்கப்படவில்லை, அனைவருமே மூத்த தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதவிப் பிரமாணம்

ஸ்ரீகண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 2013-ம் ஆண்டு சித்தராமையா இதே இடத்தில்தான் முதல்வராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.