கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா.. ஒன்று கூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமா?

congress zdfsd

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்று வரைக்கும் கர்நாடக முதலமைச்சர் யார் என்ற விவாதம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்தநிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு கர்நாடக முதலமைச்சர் யார் என்ற முடிவை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அந்தவகையில், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா தான் என்று பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு, வரும் 20-ம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற  இருக்கிறது. பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 11 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அழைப்பிதழில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்னும் சில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்குப் பிறகு, மீண்டும் எதிர்க்கட்சித்தலைவர்கள் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் அணி திரள இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒன்றுகூடல் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான விதிமுறைகளை காங்கிரஸ் புரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று மம்தா உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து முக்கியமாக பார்க்கப்பட்டது. அதாவது, காங்கிரஸ் வலுவாக இருந்தால் மாநில கட்சிகளும், மாநில கட்சிகள் வலுவாக இருந்தால் காங்கிரஸும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இல்லை என்ற எதார்த்தத்தை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 

அடுத்தபடியாக, பிரதமர் பதவியோ, முதலமைச்சர் பதவியோ வேண்டாம், பாஜகவை தோற்கடித்தாலே போதும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார். பாஜக துடைத்து எறியப்படுவது தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி கர்நாடகா மாநிலத்தில் பெற்ற வெற்றி என்பது முக்கியமானது தான். அதே நேரத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல்களில் மாநிலங்களில் வலுவாக இருக்கக்கூடிய கட்சிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என லாலு பிரசாத் வலியுறுத்தியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ்,  நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள், திரிணாமூல் கூட்டணிக் கட்சிகளை எப்படி அரவணைத்துச் செல்லப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. 

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி என்பது ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரைக்கு மட்டுமானது அல்ல, மாநில தலைமைகளுக்கானது என்பதை காங்கிரஸ் மேலிடம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாஜக ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தியே வெற்றிக்கு காரணம் என்றும் ஒருசில பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் முடிவை காங்கிரஸ் ஒருபோதும் எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி பலதரப்பட்ட கருத்துக்களால் சூழ்ந்திருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் வரும் காலங்களில் பாஜக ஆளாத முதலமைச்சர்களுடன் சுமூகமான முறையில் செல்வார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.