கர்நாடகா தேர்தலில் இலவசங்களை வாரி இறைக்கும் பாஜக, காங்கிரஸ்.!

bjp cong

சூடுபிடித்த கர்நாடக தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் பல்வேறு யுத்திகளை மேற்கொண்டு வரும்நிலையில், பாஜகவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஜேடிஎஸ். கர்நாடகா தேர்தல் மும்முனை போட்டியாக சுழன்று கொண்டிருக்கும் வேளையில், ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளிலும் களம் இறங்கியுள்ளது. 

இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் 

இந்தநிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இலவசங்களை மக்கள் மத்தியில் அறிவித்து வருகிறார்கள். கடந்த 28-ம் தேதி 'இலவசமாக பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தநிலையில், நேற்றைய தினம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

பாஜக தேர்தல் அறிக்கை

அதில், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் (5 கிலோ அரிசி + 5 கிலோ தினை) இலவசமாக வழங்கப்படும். தீபாவளி, உகாதி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தினமும் 1/2 லிட்டர் நந்தினி பால் இலவசமாக வழங்கப்படும். காசி மற்றும் கேதார்நாத் புனித யாத்திரைக்காக ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கர்நாடகா முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின் பராமரிப்புக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இதனையடுத்து, காங்கிரஸ்  இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சித்தராமையா, மாநில தலைவர் டிகே சிவக்குமார், தேர்தல் அறிக்கை குழு தலைவர் டாக்டர் பரமேஸ்வராஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்த நிலையில், பாஜகவுக்கு போட்டியாக ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

திராவிட மாடலை பின்பற்றும் கர்நாடகா காங்கிரஸ்

அதேபோல், பல்வேறு இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் திமுக குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்திருந்தநிலையில், தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி திராவிட மாடலை பின்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலா 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் மற்றும் வேலையில்லா டிப்ளமோ பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.