"உதயநிதிக்கு மட்டுமல்ல, அவரது மகனுக்கும் இதுதான்…" – அமைச்சர் கே.என்.நேரு சொன்னது என்ன?

KN Nehru

உதயநிதி அல்ல, அவரது மகன் வந்தாலும் தாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம் என்று அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார்.  

வாரிசு அரசியலில் சிக்கிய உதயநிதி 

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல பரிணாமங்களை கொண்ட உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க.ஸ்டாலினின் மகன் என்பதற்காகவே பல வசதிகளையும் அதே நேரத்தில் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.  2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளாராக உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் நிறுத்தப்பட்டார். இதனால் திமுக வாரிசு அரசியல் செய்வதாக அதிமுக, பாஜக, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செங்கல் மட்டுமே உள்ளது என செங்கலில் AIIMS என எழுதி இவர் செய்த பரப்புரை திமுகவினரை மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது.

அமைச்சர் பதவி சர்ச்சை

திமுக வெற்றி பெற்றது முதலே அமைச்சர் பதவி சர்ச்சை உதயநிதியை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பேற்கும் போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என திமுக தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.
 அதைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போதும், நேர்காணல்களின்போது, உதயநிதியிடம் அமைச்சர் பதவி குறித்த கேள்வி கேட்கப்படும்போதெல்லாம், தொகுதி வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை என மழுப்பலான பதிலை கூறி வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவுள்ளது என்ற செய்திகள் பரவியது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்ட கழகங்களில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு நெருக்கடி தர வேண்டாம் என உதயநிதி கூறியதால், அந்த நேரத்தில் அமைச்சர் பதவி சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியானது. அதன்படி கடந்த டிச. 14 ஆம் தேதி  காலை 9:30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். 

அமைச்சர்கள்மீது விமர்சனம்

உதயநிதிஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது தற்போதுள்ள மூத்த அமைச்சர்கள் உதயநிதியை விழுந்து விழுந்து  கவனித்தனர். மூத்த அமைச்சர்கள் என்றும் பாராமல் வாரிசை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. 

அமைச்சர் கே.என்.நேரு பதில்

இந்நிலையில், உதயநிதி அல்ல, அவரது மகன் வந்தாலும் தாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம் என்று அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார். 
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ”தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாங்கள் சாதாரண ஆள். எங்களை எல்லாம் உருவாக்கிய கட்சி திமுக, அந்த குடும்பம்,  தலைவர் கருணாநிதி, எண்ணற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியுள்ள இயக்கம் திமுக. அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருப்போம்?
உதயநிதி அல்ல... அவரது மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம்... அது தான் எங்களுடைய எண்ணம். எனவே எங்களுக்கு வாரிசு என்று காட்டியெல்லாம் நீங்கள் எங்களை மிரட்டி விட முடியாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தருகிற ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்” என்று தெரிவித்தார்.