சொல்லி அடித்த காங்கிரஸ்.. நழுவிய பாஜக.. முக்கியத்துவம் பெறுமா மஜத.?

karda

இந்திய அரசியலில் கர்நாடக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசியல் களம் எப்போதும் சூட்டுடன் காணப்படும். அந்தவகையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரைக்கும் சூடு தனியாமல் இருந்து வருகிறது. கர்நாடகவில் உள்ள 224 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தேசிய தலைவர்கள் கர்நாடகாவை சூழ்ந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதேபோல், கடந்த முறை ஆட்சியை நலுவவிட்ட காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கரம்பிடிக்க கர்நாடக களத்தை முற்றுகையிட்டு கோபம் தணிக்க அனல் பிரச்சாரம் மேற்கொண்டனர். கர்நாடக அரசியல் களத்தில் மும்முனை போட்டி என்று பேசப்பட்டாலும், பாஜக காங்கிரஸ் என்று இருமுனை போட்டியாக நேரெதிர் துருவங்களாகவே பார்க்கப்பட்டது. மேலும், தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக களத்தில் இறங்கியது. 

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கிடந்தது அரசியல் கழுகுகள். வாக்கு எண்ணிக்கையின் பாதி கட்டத்தை எட்டிய நிலையில்,பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.கடந்த பாஜக ஆட்சியில் ஊழல், முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தநிலையில், அதற்க்கான பதிலடியை பாஜகவிற்கு கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர் என்றே பார்க்கலாம். தற்போதைய நிலவரப்படி, பாஜக கர்நாடக அரசியலில் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த முறை ஆட்சியை தட்டிப்பறித்த நிலையில், இந்த முறை கர்நாடக ஆட்சியை பாஜக நலுவ விட்டிருக்கிறது. 

கர்நாடகாவில் பாஜக மீது அதிருப்தி இருந்துவந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை, ராகுல் சிறை தண்டனை, பதவி பறிப்பு என காங்கிரஸிற்கு கர்நாடக களத்தில் ஆதரவுக் கரத்தை பெறுக்கியது. சுழன்றடித்த கர்நாடக தலைவர்களின் பிரச்சாரங்களால் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடத்தைப் பெற்று நலுவவிட்ட ஆட்சி பீடத்தை தட்டிப்பிடித்திருக்கிறது காங்கிரஸ். 

காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று வரும்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதையடுத்து, இந்தமுறை கட்சித்தாவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு அழைத்து வர அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இது பாஜகவின் சூசகத்தை தடுக்கும் விதமாக காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. "பாஜக-வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என்று  முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் இந்த விஷயம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்துமா இல்லை, கட்சித் தலைமை சுமூகமான முடிவை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அதேநேரத்தில், "அடுத்த ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம், கிங் மேக்கர் அல்ல, நாங்களே 'கிங்'காக வருவோம்" என்று மத சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி தெரிவித்து இருந்தார். தற்போதைய நிலவரப்படி, 22 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடக அரசியல் களத்தில் மும்முனை போட்டியாக இருந்துவந்த நிலையிலும், பாஜக காங்கிரஸ் என இருமுனை போட்டியாகவே பார்க்கப்பட்டது. அதேபோல்,கர்நாடக அரசியல் களத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியத்துவம் பெறாது என்றே பார்க்கப்பட்டது. 

ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்புள்ள எச்.டி. குமாரசாமியின் மத சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த இடத்தில் மஜத முக்கியத்துவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது.