திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..!

Tiruppur

திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள, தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் - தாராபுரம் சாலையில், பொல்லிகாளிபாளையம் பகுதியில் கனகராஜ் என்பவர் பனியன் கம்பெனி நடத்திவருகிரார். இவரது நிறுவனத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தொழிலாளர்கள் அல்லாத வெளிநபர்களும் அவ்வப்போது வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பனியன் கம்பெனி உரிமையாளர் கனகராஜ் அங்கிருந்த வெளி நபர்களிடம் இங்கே வரக்கூடாது என சொல்லி அனுப்பி வைத்துள்ளார். இதில் போதையில் இருந்த நான்கு மர்மநபர்கள் கனகராஜ் மீதும், கனகராஜை காப்பாற்ற வந்த தொழிலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின்போது, தொழிலாளர்களை மர்ம நபர்கள் கத்தி மற்றும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியதால் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் சமீபகாலமாக பனியன் கம்பெனி ஊழியர்கள் மர்மநபர்களால் தாக்குதலுக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.