மீண்டும் மொழிப்புரட்சி.. அமித்ஷாவை எச்சரித்த ஸ்டாலின்.!  

vhmbnmghbnm

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

அலுவல் மொழி குழு கூட்டம்

அலுவல் மொழிக்கான 38-வது நாடாளுமன்ற குழு கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த அலுவல் மொழிகளெல்லாம் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதனடிப்படையில், இந்தக் கூட்டம் நேற்று ஆக-04 நடைபெற்றது. இதில் அலுவல் மொழிக்கான 12 அறிக்கை இதில் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் முக்கியமான கருத்துக்களை பேசியிருந்தார்.

அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும்

அதில் அவர் பேசியதாவது, "அனைத்து இந்திய மொழிகளும் அலுவல் மொழிகளும் தன்னுடைய வலிமையை காட்ட வேண்டும். மாநில மொழிகளுக்கு ஹிந்தி போட்டி அல்ல என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும் என குறிப்பிட்டார். 

மேலும், எந்தவிதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும் என்றும், அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது அது நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக வர வேண்டும்" என்று பேசியிருந்தார்.  

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல
 
இந்தநிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.