மணிப்பூர் விவகாரம்.. குஷ்புவை தேடிய அமைச்சர் கீதாஜீவன்.! 

kushbu

கலவரமான மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குக்கி இனமக்களுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை. இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காலப்போக்கில் மணிப்பூர் கலவர பூமியாக மாறியது. கலவரத்தால் மணிப்பூரில் உள்ள வீடுகள், கடைகள், கோயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

கொடூரமான வீடியோ

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த கலவரத்தில், கடந்த மே மாதம் நடைபெற்ற கொடூரமான காணொளி இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. அந்தக் காணொளியில், மொய்தி இனத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பொதுவெளியில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தி, அந்தப் பெண்களை கூட்டு பாலியல் செய்திருக்கின்றனர். இதற்கு உலக நாடுகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்தன. 

நாடாளுமன்றத்தில் அமளி

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு தினங்களும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்?

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டில் வாழும் அத்தனைப் பெண்களின் நெஞ்சிலும், தங்களால் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற அச்ச உணர்வை விதைத்திருக்கின்றன மணிப்பூர் கொடூர நிகழ்வுகள். பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? என்றும், பாஜகவிலும் மகளிர் பிரிவு இருக்கிறது, அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்ககூடியவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்றும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நலனைக் கருதியும், மணிப்பூர் மாநிலப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.