மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ops

மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் கலவரத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர மத்திய. மாநில அரசு அரசுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

மிகுந்த மனவேதனை

இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்து நம் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில், சென்று கொண்டிருப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது ஒற்றுமையே. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய நாடு பயணித்துக் கொண்டிரும் இந்த தருணத்தில், மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக இரு பிரிவினரிடையே சண்டை நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையளிக்கிறது. 

உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

இந்த வன்முறையில் வசிப்பிடங்களை இழந்துள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில், கர்ப்பிணி பெண்களும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடைபெறும் வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கூறப்படுகிறது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். என்பதில், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் உறுதியாக இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், அங்குள்ள மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

சூமூக தீர்வை எட்ட நடவடிக்கை

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் வண்ணம் இரு தரப்பு பிரதிநிதிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி ஒரு சுமூக தீர்வினை விரைவில், எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசையும், மாநில அரசையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.