மணிப்பூர் கலவரம்.. அமித்ஷா எச்சரிக்கை.!

cghvm

மணிப்பூரில் கலவரம் முற்றி வரும்நிலையில், ஆயுதம் வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்றும், ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மணிப்பூரில் வன்முறை 

மணிப்பூரில் மொய்தி இன மக்களுக்கும் நாகா, குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல்கள் ஏற்பட்டது. பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் முன்னேறிய வகுப்பினராக கருதப்படும் மொய்தீ இன மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்தால், தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் என்பது அங்குள்ள நாகா, குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதையடுத்து, அவர்களின் மோதல் போக்கு வன்முறையாக மாறியது. 

பாரபட்சமற்ற விசாரணை

அந்த வன்முறையில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குக்கி இன மக்களுடன் பயங்கரவாதிகளும் சேர்ந்து மொய்தீ இன மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மணிப்பூர் அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் கடந்த மூன்று நாளாக தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, நேற்றைய தினம் மணிப்பூர் கலவரம் குறித்து அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

அமித்ஷா எச்சரிக்கை

மேலும், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி, மணிப்பூர் கலவரம் தொடர்பான சில வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்றும், மணிப்பூர் முதல்வர் தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆயுதம் வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மணிப்பூரில் இயல்புநிலை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும், ஆன்லைன் கல்வி மற்றும் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.