மணிப்பூர் வன்முறையை - கண்டனம் தெரிவித்த அனைத்து திருசபைகளின் கூட்டமைப்பு 

Christians protest

மணிப்பூர் வன்முற்றை 

இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்திலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலங்களாக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளை கண்டித்தும் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கக் கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருசபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் புத்தூர் நால் ரோடு பகுதியில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருசபையின் பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், தென்னிந்திய திருசபையின் பேராயர் சந்திரசேகரன், கத்தோலிக்க திருசபையின் ஆயர் ஆரோக்கியராஜ், தலைமை தாங்கினர். மேலும் பௌலின்மேரி, மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 

இந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன தீர்மானங்கள் பின்வருமாறு..

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி குக்கி இனக் குழுக்கிடையே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அடிப்படையிலான மோதல்களையும் மதக்கலவரத்தையும் வன்முறைகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதியரசர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு முழுமையான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். உயிர் பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு அநாதைகளாக உணவின்றி வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்திருக்கிற மக்களுக்கு உணவு உடை மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகள் போர்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக நிவாரண முகாம்கள், அமைக்கப்பட்டு அப்பாவி மக்களின் உயிர்பலிக்கான இழப்பீட்டுக் தொகை வழங்கப்பட வேண்டும். வன்முறையினால் திட்டமிட்டு எரிக்கப்பட்ட மற்றும் தகர்க்கப்பட்ட தேவாலயங்கள் அரசாங்கத்தின் செலவில் மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும். 


இறையாண்மையை காக்க வேண்டும்

தமிழக அரசு மணிப்பூர் மக்களைபாதுகாக்க தவறிய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.மதச்சார்பற்ற இந்திய அரசு நமது நாட்டில் இது போன்ற கலவரங்கள் நடக்காமல் தடுத்து இந்திய இறையாண்மையை காக்க வேண்டும்.தேசிய மனித உரிமை, சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர்ஆணையங்கள் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உயிர் வாழும் மற்றும் வாழ்வாதார உரிமைகளை உத்திரவாதப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.