மேகதாது விவகாரம்.. ஓபிஎஸ், டிடிவி கண்டனம்.!

dsftghjk

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  

ஓபிஎஸ் அறிக்கை

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி தனது பங்கிற்கு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறி வருகிறது. இதுகுறித்து அண்மையில் புது டெல்லியில் பேட்டி அளித்துள்ள கர்நாடக மாநில துணை அமைச்சர் அவர்கள், மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்றும், இதை புரிய வைக்க முயற்சிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். மேகதாது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி அளிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம்

ஆட்சிக்கு வந்தவுடன் மேகதாது குறித்து கடுமையாக அம்மாநில துணை முதலமைச்சர் பேசியபோது, “மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்” என்று நகைச்சுவையாக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் பதில் அளித்தார். இந்தமுறை அளித்துள்ள பேட்டியும் அதேபோல்தான் அமைந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சனையில், கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பேசி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்றுத்தரவும், “மேகதாது அணை கட்டப்படாது” என்று கர்நாடக அரசை அறிவிக்கச் சொல்லவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காமல், போராடப் போவதாக கூறுவது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.

கைவிட வேண்டும் 

தற்போது கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவில் 60 விழுக்காடு நீர் இருக்கின்ற போதே, தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் தர வேண்டிய உரிய நீரை தர கர்நாடகம் மறுக்கின்றது. அணைகள் நிரம்பி வழிந்தால் தான் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற முடிவில் கர்நாடக அரசு இருக்கின்றது. இந்த நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டு நீர் கூட தமிழ்நாட்டிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேற்படி நிலையை முதலமைச்சர் கர்நாடக மாநில முதலமைச்சருக்கு புரிய வைத்து, மேகதாது திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

டிடிவி அறிக்கை

மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தியுள்ளார். 

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் அவர்கள் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும்.

துரோகம்

மேலும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமையை தராததோடு, மழை வெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

அழுத்தம் கொடுக்க வேண்டும் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில் கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.