வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.. பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்.!

dd

ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வருடத்தில் மூன்று நாட்கள் வந்தால் போதுமா?

தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து மாணவர்களையும் பொதுத்தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வருடத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்திகள் வெளியானது.

75% வருகைப்பதிவு கட்டாயம்

இந்தநிலையில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்கள். அவர்களுக்கு தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும். 

எனவே, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் என கூறினோம். ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. 

வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.