அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்?

KN Nehru Twitter Page

நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சர் கே.என்.நேருவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மர்ம நபர்கள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வழக்கமாக அவருடைய அரசு தொடர்பாண பயணங்கள், நலத்திட்டங்களை வழங்கும் செய்திகள் மற்றும் கட்சிக் கூட்டங்கள் தொடர்பான செய்திகளே பகிரப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செய்திகள் ரீட்வீட் செய்யப்பட்டன. இதனை பார்த்த ட்விட்டர் வாசிகள் சற்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள பதிவில், “எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார். 

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளரான டி.ஆர்.பி. ராஜா, அமைச்சர் கே.நேருவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரின் இந்திய நிறுவனத்துக்கு புகார் அளித்து இருப்பதாகவும், ட்விட்டர் பக்கத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.