அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. மு.க.ஸ்டாலினின் பேச்சை நினைவுகூறி அதிமுகவினர் கலாய்.! 

qwerr

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியால் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

முதலமைச்சர் ஆலோசனை

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் அமைச்சர் எ.வ.வேலு, கே.என். நேரு, சி.வி. கணேசன், மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், திமுக வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட திமுகவின் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சென்றுள்ளார். அமலாக்கத்துறை விசாரணையில் மனித உரிமை மீறல் என முறையிடவும் திமுக முடிவு செய்துள்ளது. 

செந்தில் பாலாஜி மனைவி வழக்கு 

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி மனைவி. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா குற்றம் சாட்டியுள்ளார். அவரச வழக்காக விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முறையிடவும் முடிவு செய்துள்ளார்கள். 

முதலமைச்சர் செந்தில் பாலாஜி சந்திப்பு

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒருசில அமைச்சர்கள் சென்று நலம் விசாரித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு, வழக்கை சட்டரீதியாக உறுதியுடன் திமுக எதிர்கொள்ளும் என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். "எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் உறுதியாகத் தொடர்வோம் என்றும், மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய பிறகும் நெஞ்சு வலி வருமளவு நெருக்கடி கொடுத்திருப்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். 

முதலமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் 

இந்தநிலையில், ஒரு குற்றவாளியை முதலமைச்சர் சென்று நேரில் சந்திப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததில், "அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரை எப்படி முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்கலாம். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு ஒரு முதலமைச்சர் அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டு கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

இபிஎஸ் கருத்து

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். "உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட அனுமதி அளித்ததன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.  

இரட்டை வேடம் போடுகின்ற முதலமைச்சர்

வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென்று தனி அதிகாரிகள், தனிச்சட்டம் இருக்கும் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். தலைமைச் செயலகத்தில் அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகத்தான் சோதனை நடைபெற்றது என்று அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோலத்தான், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் ஆதாரங்கள் இருப்பதன் காரணமாக செந்தில் பாலாஜியின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. இரட்டை வேடம் போடுகின்ற முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர். 

எதுக்கு இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று என்ன சொன்னார், அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார். அதேபோல், ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு போகவேண்டியதுதானே?, எதுக்கு இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது. 

தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காகவே ஓடிப்போய் பார்க்கிறார்கள்

ஆவணங்களை கொடுப்பேன் என கூறியவர் அதனை வழங்க வேண்டியதுதானே. அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த பிரச்னையே வராது. தனக்கு எதோ ஒரு பாதிப்பு வரும் என்று ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார்கள். ஆகையால், தனக்கு எதோ ஒரு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்திய நாடகம்தான் இது. அதுமட்டுமல்ல, 30 ஆயிரம் கோடி விஷயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், தங்களுக்கும் ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பதற்றத்தில் திமுக அமைச்சர்கள் எல்லோரும் ஓடி ஓடி போய் பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜி மீது பாசத்தில் சென்று பார்க்கவில்லை, தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காகவே ஓடிப்போய் பார்க்கிறார்கள். 

செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தால் நல்லது

அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இதே மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, தமிழ்நாட்டிற்கு தலைகுணிவு என்றார். இன்றைக்கு அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய செந்தில் பாலாஜியின் அறைக்கே சென்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர். இதுதான் தமிழகத்திற்கு தலைகுணிவு. அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தால் நல்லது" என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.