புயலை கிளப்பிய 31 எம்.எல்.ஏக்கள்.. அரியணைக்கு போட்டி போடும் இரு தலைகள்.. கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்.? 

kar sheet

கர்நாடக காங்கிரஸின் வழக்கம்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் எழத் தொடங்கியது. கர்நாடகா காங்கிரஸின் மூத்த தலைவராக சித்தராமையா இருக்கிறார். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார். கர்நாடகாவில் யார் கட்சியின் தலைவராக இருக்கிறாரோ அவர்தான் முதல்வராவார் என்பது வழக்கம். 

அகில இந்திய தலைமை முடிவு செய்யும்

இதையடுத்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டின் முன் திரண்டு முதலமைச்சராக வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் சட்டமன்றக்குழு தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்க இருந்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய, அகில இந்திய  காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

புயலை கிளப்பிய 31 எம்.எல்.ஏக்கள்

இந்த தீர்மானத்திற்குப் பிறகு, கர்நாடகா தேர்தலின் பொறுப்பாளர்களாக இருந்த, சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனியாக அழைத்து அவர்களின் விருப்பத்தை கேட்டறிந்தார்கள். அதில் புதிதாக வெற்றி பெற்றுள்ள 31 எம்.எல்.ஏ-க்கள் டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகின.

பிறந்தநாள் பரிசலிக்குமா மேலிடம்

கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் இரு கரங்களாக இருந்தவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார். சித்தராமையாவிற்கு இது கடைசி தேர்தல் என்பதால் அவருக்கு பதவி வழங்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், கர்நாடகா காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியவர் டி.கே.சிவக்குமார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்படிப்பட்ட சூழலில், டி.கே.சிவக்குமாரின் பிறந்தநாளான இன்று, அவருக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் தலைமை அறிவித்து மகிழ்விக்குமா என்று இன்னொரு புறம் யூகிக்கப்படுகிறது. 

மூன்றாவது தலையா?

இவர்களில் ஒருவரை முதல்வராக்கினால், இன்னொருவருக்கு சிக்கல் ஏற்படும் என்ற வகையில், இருவருக்கும் இல்லாமல் வேறு சமுதாயத்தில் அதாவது, கர்நாடாகாவில் வீரேந்திந்திர படேலுக்குப் பிறகு, லிங்காயத் சமுதாயத்தில் யாரும் முதலமைச்சராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபட்டது

போட்டா போட்டி

முதலமைச்சர் பதவிக்கு போட்டா போட்டியாக இருக்கும் சூழலில், துணை முதலமைச்சர் பதவிக்கும் போட்டா போட்டியாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை இன்று மாலைக்குள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.