”Farewell கொடுத்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” - கண்கலங்க வைத்த ‘தல’ தோனி!

ms dhoni

கொல்கத்தாவிற்கு எதிராக 57 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து பேசிய தோனி தன்னுடைய Farewell குறித்து பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அபார வெற்றி பெற்ற சென்னை!

கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வழக்கமாக செய்யும் எந்த தவறும் செய்யாமல் அபாரமாக ஆடினர். கான்வே, ருதுராஜ், ரஹானே, ஷிவம் துபே, ஜடேஜா என அனைவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை இலக்காக வைத்த அணி என்ற பெருமையை சென்னை அணி பெற வழிவகுத்தனர். களமிறங்கிய ஒவ்வொரு பேட்ஸ்மேனும் குறைந்தபட்சம் 2 சிக்ஸர்களாவது அடித்தனர். 20 ஓவர் முடிவில் 235 சென்னை அணி எடுக்க, சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது கொல்கத்தா. இதையடுத்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

முதலிடம் பிடித்த சென்னை

நடப்பு தொடரில் சிஎஸ்கே பெறும் 5வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் முறையே 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் இரண்டாமிடமும், லக்னோ மூன்றாமிடத்திலும் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இதேபோல், 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.புள்ளி பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

ஓய்வு பற்றி பேசிய தல தோனி!

வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, “ ஈடன் கார்டன் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். இம்முறை சென்னை அணியின் ஜெர்சியில் வந்த அனைத்து ரசிகர்கள் அடுத்த முறை கொல்கத்தா அணியின் ஜெர்சியில் தான் வரப் போகிறார்கள். எனக்கு ஃபேர்வெல் கொடுப்பதற்காக இப்படி மஞ்சள் ஜெர்சியில் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களின் பணியையும், ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இன்றைய போட்டியில் ஒரு பக்கம் பவுண்டரி அருகிலும், இன்னொரு பக்கம் பவுண்டரி எல்லை நீளமாகவும் இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களிலேயே நாங்கள் விக்கெட்டை வீழ்த்தி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்” என்று தோனி கூறியிருந்தார். 

ரசிகர்கள் சோகம்

சென்னை அணியின் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஃபேர்வெல் குறித்து தோனி பேசியது மிகப்பெரும் வருத்தத்தை உருவாக்கியுள்ளது.