WPL 2023: அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த மகளிர் மும்பை இந்தியன்ஸ் அணி..! 

Mumbai Indians Women

நடைபெற்று வரும் மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

டெல்லி அணி பேட்டிங்

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நேற்று (09-03-2023) நடந்த 7வது லீக்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங்  பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக டெல்லி அணியின் கேப்டன் மெக்லானிங் மற்றும் ஷெஃபாலி வர்மா ஆகியோர் இறங்கினர். இதில் ஷெஃபாலி வர்மா 6 பந்துகளுக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இஷாகியின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட்டானார். பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் டெல்லி அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக்லானிங் மட்டும் 41 பந்துகளுக்கு 43 ரன்களை எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், சாயிகா இஷாகி, இஷி வோங் மற்றும் ஹேர்லி மேத்தியூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

எளிதில் வெற்றி

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளான, யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேர்லி மேத்தியூஸ் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் முறையே 41 மற்றும் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 15வது ஓவரின் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து 109 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் மகளிர் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்று தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.