TATA WPL 2020: கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி..! 

Mumbai Indians Women Champion

பெண்களுக்கான முதல் பிரீமியர் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் உள்ள  பிரபோர்ன் மைதானத்தில் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இரண்டு வலுவான அணிகலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடள்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி பேட்டிங்

இதனையடுத்து டெல்லி அணியில் களமிறங்கிய  தொடக்க வீராங்கனையான  செஃபாலி வர்மா வந்த வேகத்தில் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக் லானிங் 29 பந்துகளில் 35 ரன்கள் அடித்து பொறுப்புடன் விளையாடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலைஸ் கேப்ஸி  டக் அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய  ஜேமிமா ட்ரிகியூஸ்  9 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மெர்சையின் கேப்பும்  18 ரன்களில் வெளியேற, டெல்லி வீராங்கனைகள் தொடர்ந்து  ரசிகர்களுக்குப் பெரிய  ஏமாற்றம் அளித்தனர். இதே போன்று அருந்ததி ரெட்டியும்  டக் அவுட் ஆனார், பின்னர் மின்னு மணி 1 ரன்னிலும், டானியா பாட்டியா டக் அவுட் ஆனதால்  டெல்லி அணியின் நிலைமை மிகவும் மோசமானது. இறுதியில் ஷிகா பாண்டே 17 பந்துகளில்  27 ரன்கள் சேர்க்க டெல்லி அணி 20 ஓவர் முடிவுல் 131 ரன்கள் என்ற  இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது. மும்பை அணியில் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் இஸ்ஸி வோங் சிறப்பாகப் பந்து வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

  

மும்பை பேட்டிங்

132 ரன்கள் எடுத்தால் முதல் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வெல்லலாம் என்ற  எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹெய்லி மேத்தீவ்ஸ் 13 ரன்களிலும், யாஷ்திகா பட்டியா 4 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து நாட் சிவியர் ப்ரண்ட் நிதானமாக விளையாடி 55 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்  அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மும்பை கேப்டன்  ஹர்மன்பிரித் கவுர், ப்ரண்ட் உடன்  ஜோடி சேரிந்து  பொறுமையாக விளையாடினார்.

ஹர்மான்பிரித் கவுர் 37 ரன்களில், ரன் அவுட் ஆனார். இறுதியில் அமீலா கேர் 8 பந்தில் 14 ரன்கள் அடித்தார். இதனால் மும்பை  அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த நாட் சிவியர் ப்ரண்ட் ஆட்டநாயகி  விருதை பெற்றார். ஒட்டுமொத்த தொடரில் 271 ரன்கள் எடுத்து 16 விக்கெட்களையும் கைப்பற்றிய மும்பை வீராங்கனை ஹேலி மேத்யூஸ் தொடர் நாயகி விருதைப் பெற்றார்.