நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மானியக் கோரிக்கை 2023-2024

website post (71)

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

* 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

*கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் ரூ.22.50 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் அமைக்கப்படும்.

* 3 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் ரூ.52.50 கோடியில் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

* ரூ.150 கோடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் மற்றும் பழைய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.

* மாநகராட்சிகள், நகராட்சிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படும் வகையில் 100 பூங்காக்கள் மற்றும் பசுமை இயற்கை வளங்களை மேம்படுத்த ரூ.60.90 கோடி ஒதுக்கீடு.

* மாநகராட்சிகள், நகராட்சிகளில் 400 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளை தார்சாலை, கான்கிரீட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்த ரூ.288 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு.

* ரூ.345 கோடி மதிப்பீட்டில் 20 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சின்னாளபட்டி, அந்தியூர், அலங்காநல்லூர், ஓமலூர், தம்மம்பட்டி, சிவகிரி, ஆடுதுறை, நாரவாரிக்குப்பம், சாத்தான்குளம் மற்றும் காரியாப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் ரூ. 25 கோடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

* நிலத்தடி நீரை பாதுகாக்கும் வண்ணம், முதற்கட்டமாக ரூ.50 கோடியில் 20 பேரூராட்சிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும்.

* ரூ.50 கோடியில் 100 நீர்நிலைகள், பேரூராட்சிகளில் மேம்படுத்தப்படும்.

* பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு ரூ.7 லட்சம் செலவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் வீடுகளில் சேரும் குப்பைகளை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சேகரிக்க ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் 350 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

* கொளத்தூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மற்றும் ஆலந்தூர் ஆகிய 7 இடங்களில் தலா ரூ.5 கோடி வீதம் மொத்தம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் புதிய சமூதாய நலக்கூட்டங்கள் அமைக்கப்படும்.

* விவசாய விளைபொருட்களை நகர் பகுதிகளில் சந்தைப்படுத்த ஏதுவாக, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.200.70 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிகளிலுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 50 பூங்காக்கள் மற்றும் 10 விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

* தொல்காப்பியப் பூங்காவில் பார்வையாளர்கள் மையம், நடைபாதை, பார்வையாளர்கள் தளம் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* கொருக்குப்பேட்டையில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 3 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, விடுபட்ட 25 தெருக்களுக்கு  குழாய்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தாளக்கரை ஊராட்சியில் புதிய 14 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.9.70 கோடி மதிப்பீட்டிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேவியகரகம் ஊராட்சிக்கு ரூ.3.75 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் தெரிசங்கோப்பு அருகில் பழையாற்றை நீராதாரமாகக்கொண்டு கடுக்கரை, திடல் மற்றும் காட்டுப்புதூர் ஊராட்சிகளுக்கு ரூ.9.50 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* புழல் மற்றும் சூரப்பட்டில் அமைந்துள்ள 300 MLD மற்றும் 14 MLD சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்ணகி நகர் மற்றும் கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு புதிய குழாய்களை பதித்து,  குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகிக்கும் பணிகள் ரூ.89 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் 23 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதி மூலம் மேற்கொள்ளப்படும்.