நாகலாந்து நாய்க்கறி சர்ச்சை..  சமூக நீதி இது தானா? அண்ணாமலை கண்டனம்.! 

nany

ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாடு ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் பேசியதாவது; “நாகாலாந்துகாரன் நாய்க்கறி திண்பான். நாய்க்கறி திண்பவனுக்கு அவ்வளவு சொரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினான் என்றால், உப்பு போட்டு சாப்பிடுகிற தமிழனுக்கு எவ்வளவு சொரணை இருக்கும் என்று ரவி மறந்துவிடக்கூடாது” என்று பேசியது விமர்சனத்துக்குள்ளானது.

ஆளுநர் மாளிகை கண்டனம்

இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்தது. ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தது. 

பாஜகவினர் கண்டனம்

மேலும், ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சுக்கு பாஜகவினர் அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். "வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும் ஆர் எஸ் பாரதி என்றும், நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய  ஆர் எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

சமூக நீதி இது தானா?

இந்தநிலையில், ஆர்.எஸ்.பாரதியின் வீடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். "சமீபத்தில் ராஜ்பவன் மீதான தாக்குதல், ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான். ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இண்டியா கூட்டணியின் சமூக நீதி இது தானா? என்று குறிப்பிட்டுள்ளார்.