அமர்பிரசாத் ரெட்டிக்கு ஆப்பு அடித்த தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன்  திருப்பதி.!

website post (29)

தமிழ்நாடு பாஜகவில் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை தலைவராக பதவியேற்ற பின்பு, கட்சியில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகுவது தொடர் கதையாகி வருகிறது. கே.டி. ராகவன் தொடர்ந்து தற்போது திலீப் கண்ணன் வரை வெளியேறி இருப்பது தமிழக பாஜக உட்கட்சி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். 

அதிமுக - பாஜக கூட்டணி உரசல்

இந்தநிலையில், பாஜக தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியைவிட்டு விலகியிருப்பது அரசியல் களத்தில் பெரும் புழுதியை கிளப்பியிருந்தது. கட்சியை விட்டு விலகிய ஒரு சில மணி நேரத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவிலிருந்து அதிமுகவில் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இணைந்தது முதல் அதிமுக - பாஜக கூட்டணி உரசல் ஏற்பட்டு இருக்கிறது. 

எடப்பாடி ஒரு '420'

இதனையடுத்து, தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியை 420 என குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளை வெளிப்படையாக பேசி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் "நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?" என்று குறிப்பிட்டிருந்தார். 

அண்ணாமலையின் வலது கை

மேலும், நீங்கள் சொல்கிற கருத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிற கருத்து என்றுதான் மக்கள் மத்தியில் பார்க்கப்படும் என்ற கேள்விக்கு ஆமாம், அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும்போது அண்ணாமலை கருத்தைதான் அமர்பிரசாத் ரெட்டி பேசுகிறார் என்று பார்க்கப்படுகிறது. பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா போன்றோர் கட்சியைவிட்டு வெளியில் சென்ற பின்பு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அமர்பிரசாத் ரெட்டி கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும், அண்ணாமலையை பார்ப்பதற்கு முன் அமர்பிரசாத் ரெட்டியிடம் கேட்டுதான் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது என்று குற்றம் சாட்டியிருந்தனர். அதற்கு அண்ணாமலையும் ஆமோதிக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தனர். இதனால், அண்ணாமலையின் வலது கரமாக அமர்பிரசாத் ரெட்டி செயல்பட்டு வருகிறார் என்ற பார்வை பாஜகவினரிடத்தில் இருந்தது. 

அமர்பிரசாத் ரெட்டிக்கு ஆப்பு.!

இந்தநிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அமர்பிரசாத் ரெட்டியின் கருத்து தனிப்பட்ட கருத்து, அதெல்லாம் கட்சியின் கருத்து அல்ல என்று அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகளான நானோ இல்லை அண்ணாமலையோ பேசுவது மட்டும்தான் கட்சியின் கருத்து. அவருடைய கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என அமர்பிரசாத் ரெட்டிக்கு ஆப்பு அடித்திருக்கிறார் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.