பிடிஆரின் 2-வது ஆடியோ.. விழிபிதுங்கும் திமுக.!

ptr audio

பிடிஆர் ஆடியோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மர்ம நபர் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த ஆடியோவில், "கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, உதயநிதியும், சபரீசனும் இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்ற உரையாடல் வெளியாகி திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.   

அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் 

நிதியமைச்சர் பிடிஆரின் சர்ச்சை ஆடியோ குறித்து, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள், இதுபற்றி முதல்வர் உரிய விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்,  அவரது அமைச்சர் பதவி கூட பறிக்கப்படலாம் என்று சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தின.

விளக்கம் அளித்த பிடிஆர்

இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர். தியாகராஜன் சர்ச்சை காணொளி தொடர்பாக தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் மூன்று பக்க விளக்கத்தை வெளியிட்டார். ஆடியோ பற்றி Forensic report வெளியிட்டு, அது பொய்யான ஆடியோ என்று விளக்கம் அளித்தார். 

2-வது ஆடியோ ரிலீஸ்

இந்த ஆடியோ சர்ச்சை பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பிடிஆர், அது என்னுடைய ஆடியோ இல்லை என்று விளக்கம் கொடுத்து பெருமூச்சு விட்டு நிறுத்தவதற்குள், தற்போது பிடிஆருடைய மற்றொரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். 

அந்த ஆடியோவில். “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவாளித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்து இருக்க வேண்டும் அல்லவா. ஆனால் இங்கு எல்லாம் முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். நிதி மேலாண்மை செய்வது சுலபம், இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்.
 
முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்ய சொல்லுங்கள். அதனால் 8 மாதங்கள் பார்த்த பிறகு முடிவு செய்து விட்டேன் இது ஒரு நிலையான முறை கிடையாது என்று. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் இப்போது நான் விலகினால் இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களுக்கு திருப்பி அடிக்கும். எப்படி சொல்வது நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாத போது அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை” என்று பிடிஆர் பேசியிருப்பதாக இரண்டாவது ஆடியோவை தற்போது அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

விழிபிதுங்கும் திமுக

அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த ஆடியோ தற்போது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் தமிழ்நாடு அரசியல் இன்னொரு பக்கம் கர்நாடக அரசியல் என்று லெப்ட் ரைட் வாங்கிக்கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு மத்தியில், ஒரு பக்கம் வருமான வரித்துறை சோதனை இன்னொரு பக்கம் ஆடியோ என்று திமுக அரசு விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.