தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தை..! 

Syriya born baby

சிரியாவில் மீட்பு பணியின்போது கட்டிட இடிபாடுகளில் இருந்து, பிறந்த குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளிலும் பல ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய மீட்புக் குழுவை துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்பியுள்ளன. 

இந்நிலையில் நேற்று சிரியாவில் உள்ள ஜிண்டேரிஸ் என்ற பகுதியில் மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு இளம்பெண், தனது இடிந்து விழுந்த தனது வீட்டின் கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் தீடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், மீட்பு படையினர் விரைந்து வந்து குழந்தையின் குரல் கேட்கும் இடத்தை கண்டறிந்து இடிபாடுகளை அகற்றியுள்ளனர். அப்போது தொப்புள் கொடியுடன் அழுதுகொண்டிருந்த குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் குழந்தையின் அருகில் இருந்த தாயை சடலமாக மீட்டனர்.

 

தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையின் புகைப்படமும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. இதனைப் பார்த்த சமூகவலைதளவாசிகள், தங்களது உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்திவருகின்றனர். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பிறந்த குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.