கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? வேற லெவல் ட்விஸ்ட் அடித்த நிர்மலா சீதாராமன்

Nirmala sitaraman

பெருநிறுவனங்களின் கடனை ரத்து செய்வதுபோல மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். 

தள்ளுபடியான பெருநிறுவனங்களின் கடன்கள்

கடந்த 2017 – 18 ஆம் ஆண்டில் ரூ. 1, 61, 328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018 – 19 ஆம் ஆண்டு ரூ. 2, 36, 265 கோடியாக அதிகரித்தது. பின்னர், 2019 -2020ல் ரூ. 2, 34, 170 கோடியாகவும், 2020 – 2021ல் ரூ.2,02,781 கோடியாகவும், 2021 – 22ல் ரூ. 1, 57, 096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி குறைந்தது. மொத்தமாக 2017 முதல் 2022 நிதியாண்டு வரை ரூ. 9, 91, 640 கோடி வரை வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர்

தற்போது நாடாளுமன்றத்தில் குளிகால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் கேள்வி பதில் மற்றும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி சுப்ராயன் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ”பெரு நிறுவனங்களில் லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல குறைந்த அளவே இருக்கும் மாணவர்களின் உயர்கல்வி கடன் ரத்து செய்யப்படுமா” என்ற கேள்வியை முன்வைத்தார். 

நிர்மலா சீதாராமன் பதில்

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பெரு நிறுவனங்களில் கடனை அரசு ரத்து செய்யவில்லை” என்று பதிலளித்தார். மேலும், ”மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு. பெரு நிறுவனங்களின் கடனை மத்திய அரசு வசூலித்து அதனை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வருகிறோம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்

நிர்மலா சீதாராமனின் பதிலை ’பொய்’ என எதிர்க்கட்சிகள் கோஷமிட, உடனே பொய் என்ற வார்த்தை நாடாளுமன்ற வளாகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தமிழில் விளக்கம் அளித்தார்.