எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை : ஓபிஎஸ் திட்டவட்டம்

ops vs eps

உண்மையான அதிமுக யார்..? 

அதிமுகவில் எழுந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக அக்கட்சி இரண்டாக பிளவுபட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதி மன்றம் சென்ற நிலையில், தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும், ஓ.பன்னீர் செல்வமும் தங்கள் அணியே உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் முன்னாள் முதலமைச்சரான ஓ பன்னீர் செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்குக் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்லை என்று மத்திய அரசே சொல்லிவிட்டது" என்றார்.