"அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது" – ஜெ., தீபா கருத்தால் கொந்தளிக்கும் அதிமுகவினர்!

j deepa

அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது என்று மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ள கருத்தால் அதிமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

ஜெ.படத்திற்கு மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு, சசிகலா அவருடன் ஆதரவாளர்கள் என அதிமுகவைச் சேர்ந்த அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா  மரியாதை செலுத்தினார். 

அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, ”ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளிலே சர்ச்சையாகவே உள்ளது. அதிமுகவில் பிளவுப்பட்டிருப்பது ஏற்கனவே இருந்த ஒன்றுதான். இது ஒன்னும் புதிதல்ல, ஆனால், ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தற்போது ஒரு சரியான தலைமை இல்லாமல் அதிமுக பிளவுப்பட்டுள்ளது. 

என்னுடைய மறைவு பின்னாலும் 100 ஆண்டுகள் இந்த கட்சி இருக்கும் என ஜெயலலிதா கூறினார். ஆனால், இவர்கள் 100 நாட்கள் கூட நன்றாக ஆட்சி செய்யவில்லை. இதனால் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது. எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய யாரும் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை. ஆறுமுகசாமி பரிந்துரையின்படி, முதலில் நடவடிக்கை எடுக்க படவேண்டியது சசிகலா மீதுதான்” என்று கூறியுள்ளார். 

தமிழக அரசுக்கு கோரிக்கை

மேலும், ”ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கைக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லாமல் இருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தொடர்பாக உரிய விசாரணையை நடத்த வேண்டும்” என தமிழக அரசுக்கு ஜெ. தீபா கோரிக்கை வைத்துள்ளார். 

தொண்டர்கள் கொந்தளிப்பு

ஏற்கனவே கட்சி பிளவுப்பட்டுள்ளதால் மனவருத்தத்தில் இருக்கும் அதிமுக உண்மை விசுவாசிகளுக்கு ஜெ.தீபாவின் கருத்து மிகப்பெரிய கோவத்தை உண்டாக்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.