நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்.. நீதிபதிகள் காட்டம்.!

wwwqwww

9-வது நாளாக போராட்டம்

கலங்கரவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீனவர்கள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் கடைகளை அமைத்துள்ளதால் காலை முதல் இரவு வரை அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கடந்த 11-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சென்னை மாநகராட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, கடைகள் அகற்றியது தொடர்பான அறிக்கையை இன்று சமர்பிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தது. உத்தரவிட்டதையடுத்து, சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மறுநாளே கடைகளை அகற்ற தொடங்கினர். கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுடன் 9-வது நாளாக மீன்களை தரையில் கொட்டி, படகை பாதையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

This Is Tamil கள ஆய்வு

நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இன்றைய தினம் This Is Tamil கள ஆய்வு மேற்கொண்டது. கள ஆய்வில், நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள, அந்த லூப் சாலை முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டு, மரங்களையும் படகுகளையும் பாதையில் நிறுத்திவைக்கப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, படகுகள் எல்லாம் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், அங்குள்ள உணவகங்கள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். 

MLA-வை திருப்பி அனுப்பிய மீனவ மக்கள்

மீனவர்கள் போராட்டம் தீவிரமடைந்தநிலையில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் த.வேலு வருகை தந்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவ மக்களிடம், நான் சென்னை மாநகராட்சி அலுவலர்களிடம் பேசிவிட்டேன், கடைகளை மாற்றி அமைக்க வலியுறுத்தி, போராட்டத்தை கைவிடச் சொல்லி வலியுறுத்தினார். ஆனால், அங்குள்ள மீனவ மக்கள் இது எங்களுடைய பூர்வீக மண், இதைவிட்டு எங்கேயும் செல்லமாட்டோம் என்று உறுதியாக பேசியதால், அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நொச்சிக்குப்பம் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவ மக்கள். 

சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம்

இந்தநிலையில், கடைகள் அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், சென்னை மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என மீனவர்களிடம் அறிவுறுத்துங்கள் என்று வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு, மீன் சந்தை கட்டுமான பணிகள் முடியும் வரை சாலையின் மேற்கு பக்கம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.