தீவிரமடையும் நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்.. என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி.! 

xdgf

தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை மீனவர்கள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் கடைகளை அமைத்துள்ளதால் காலை முதல் இரவு வரை அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

நாளை தாக்கல்

விசாரணையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் இருக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியநிலையில், சாலையில் ஆக்கிரமிப்புக்குத்தான் அனுமதிக்கப்படுகிறது, போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தனர். லூப் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்தநிலையில், மீன்களை கழுவுவதற்கா சாலைகள்,? நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசரசம் செய்து கொள்ளவும் முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18-ம் தேதி அதாவது நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

நொச்சிக்குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு 

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அடுத்த மறுநாளே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தகட்டமாக, மீன்களை சாலைகளில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நொச்சிக்குப்பம் எங்களுடைய பாரம்பரிய இடம். இது எங்களுடைய வாழ்வாதாரம். நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் வெறும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல; பேரிடர் காலத்தில் படகில் நூற்றுகணக்கான மக்களை காப்பாற்றியவர்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி

தொடர்ந்து 8-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து, இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது, மீனவர்கள் சாலையின் நடுவே படகை நிறுத்தி மீன், நண்டுகளை கொட்டி எதிர்ப்பு கடைகள் அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீன்கடைகளை தொடர்ந்து செயல்பட அனுமதி தர வலியுறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய தினம் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற உத்தரவு அளித்திருந்தநிலையில், மீனவர்களின் எதிர்ப்புகளால் முழுமையாக கடைகளை அகற்ற முடியாத சூழலில், அடுத்ததாக, சென்னை மாநகராட்சி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.