வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்.!

website post (1) (41)

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்றைக்கு (மார்ச்-02)  வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவுக்கு கடந்த 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா தேர்தலில், 27 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை இருந்து வருகிறது. நாகாலாந்து தேர்தலில் 41  தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

திரிபுரா 

திரிபுரா மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 27 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

இடதுசாரிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களிலிலும், திப்ரா மோர்த்தா கட்சி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

மேகாலயா

அதேபோல், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி 20 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக 7 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 7 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ்  7 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

நாகலாந்து

நாகலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 41 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்து வருகின்றன.

நாகா மக்கள் முன்னணி கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், இதர கட்சிகள் 14 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.