கோட்டையில் தயார் நிலையில் அறை..! 

Udhayanidhi

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

2021 பொதுத் தேர்தல் 

கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றிப்பெற்றார். அதன் பிறகு கொரோனா காலம் அதைத் தொடர்ந்து மழை என கடந்த ஆண்டு முழுவதும் தொகுதியைச் சுற்றி வந்த உதயநிதி ஸ்டாலின் அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். திரைப்பட விநியோகம், தயாரிப்பு மற்றும் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வந்த இவருக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. 

அமைச்சர் பதவி 

உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அதற்கான புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உதயநிதி ஸ்டாலின் எந்த துறையின் அமைச்சர் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

தலைமைச் செயலகத்தில் அறை

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக, தலைமைச் செயலகத்தில் தனி அறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறைக்கு அருகிலேயே உதயநிதி ஸ்டாலினுக்கும் தனி அறை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து அந்த அறை தயார் நிலையில் இருப்பதாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.