கரம் கோர்க்கும் எதிர்க்கட்சிகள்.. கை கொடுக்குமா 2024-ல்.?

Patna

அசுர பலம் பொருந்திய பாரதிய ஜனதா கட்சியை 2024-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிடுவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள். அந்த வகையில்தான், இன்று ஜூன் 23 பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டமானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இடதுசாரிகள் சார்பில் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, மகராஷ்டிரா சிவசேனா பிரிவின் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கப்போவதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதாக வருகை தந்திருக்கின்றனர். டெல்லியில் இயற்றப்பட்ட அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்தநிலையில், ஒரு சில நிபந்தனைகளுடன் கூட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் அவசர சட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை ஆம் ஆத்மிக்கு தெரிவிக்காமல் இருந்தால் கூட்டத்தின் பாதியில் இருந்தே கிளம்புவதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

பலம் பொருந்திய பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் பலம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தவகையில், நேற்றைய தினம் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது. 'எதிர்க்கட்சிகளின் இதயங்கள் ஒன்று சேரவில்லை, அவர்களுடைய கரங்கள் மட்டும் தான் ஒன்று சேர்ந்திருக்கிறது' எனவே அவர்களின் கூட்டணிக்குள் வரவில்லை என்று தெரிவித்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பின்னடைவு தான். அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பிற்கு தீவிர வேளைகளை செய்து வந்தவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். ஆனால், இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல் சொல்லப்படுகிறது. அதுவும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பிற்கு ஒரு பின்னடைவு. மேலும், ஆந்திராவின் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அதேபோல், சிரோமணி அகாலிதளமும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் ஒரு பின்னடைவு. 

இப்படி, எதிர்க்கட்சிகளுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால் 2024 தேர்தலில் கை கொடுக்குமா என்பது கேள்வியாக இருக்கிறது. முழுமையான எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் போவதற்கு காங்கிரஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என்றே சொல்லலாம். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் கருத்து வேறுபாடு, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவுடன் கருத்து வேறுபாடு, மேலும் கேரளாவில் இடதுசாரிகளுடன் உள்ளிட்ட கட்சிகளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கிறது என்பது நிதர்சனம். இவற்றையெல்லாம் தாண்டி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எடுத்திருக்கக்கூடிய முன்னெடுப்பு ஒரு பக்கம் வரவேற்கதக்க விஷயமாக இருந்தாலும்கூட, இன்னொரு பக்கம் மாயாவதி சொன்னதுபோல, இவர்களின் கரங்கள் இணைந்ததே தவிர, இதயங்கள் ஒன்றிணையவில்லை என்ற கருத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கேள்வியும்கூட.

ஒரு பக்கம் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என பாஜக தலைவர்கள் முன்னெடுத்திருக்கக்கூடிய நிகழ்வுகள், இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கூட்டம் அதிலும் ஒருசில கருத்து முரண்பாடுகளால் நிறைந்த கூட்டம் என இந்திய அரசியல் களம் 2024-யை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் படையெடுக்கும் பாஜக தலைவர்களாலும், கரம் கோர்க்கும் எதிர்கட்சிகளாலும் 2024 தேர்தல் களம் எந்தமாதிரியான முடிவுகளை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.