வருமானவரி துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்

website post (1) (26)

கடந்த 2016-ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. கடந்த 2016ஆம் ஆண்டு சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கரன்சி நோட்டுகளையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.

அந்த ஆவணங்களில் இருந்து சேகர் ரெட்டி, மணல் கொள்ளைக்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து 217 கோடி ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் இருந்து 155 கோடி ரூபாயும், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து 197 கோடி ரூபாய் பெற்றுள்ளதும், பின்னர் இந்த தொகை, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கட்சி வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

வருமானவரித் துறையின் இந்த நோட்டீஸை ரத்து செய்யவும், மேல் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று (மார்ச்-01) தற்போது விசாரணைக்கு வந்தது. நோட்டீசை எதிர்த்து வருமானவரித் துறையிலேயே மேல் முறையீடு செய்ததால் மனு வாபஸ். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறுவதற்கான மனுவை தாக்கல் செய்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.