பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சிறையிலடைக்க உத்தரவு.!

website post (17)

பொய் செய்தி பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

யார் இந்த எஸ்.ஜி.சூர்யா

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்து வருகிறார்.

என்ன செய்தார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ என பதிவிட்டிருந்தார்.

எஸ்.ஜி.சூர்யா மீது புகார்

இந்த பதிவைக் கண்டித்து கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மதுரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கணேசன் என்பவர் தலைமையில் எம்.பி.சு.வெங்கடேசன் அவர்களைப் பற்றி தவறான தகவலை பதிவு செய்திருப்பதாகவும், மதுரை மாவட்டத்தில் அவர் குறிப்பிடுகின்ற அந்த பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது, மேலும், அங்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரே கிடையாது என்றும், பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தவறான தகவலை பரப்பியதாகவும் மதுரை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கைது

இந்தநிலையில், நேற்று ஜூன் 16-ம் தேதி இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் வெளியே எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

சிறையிலடைக்க உத்தரவு

இதையடுத்து, எஸ்.ஜி.சூர்யா கைதை கண்டித்து பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பாஜக துணைத்தலைவர் நாராயாணன் திருப்பதி, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், பொய் செய்தி பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.