மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த 45 மனுக்களில்,  26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு

trichy grievance

உயர் அதிகாரிகள் பங்கேற்ற குறைதீர்க்கும் முகாம்

தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு  உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் சத்திய பிரியா, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம்  திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

45 மனுக்களில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு

இம்முகாமில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையகம், வடக்கு மற்றும் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு முகாமில் மேற்கண்ட 45 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தும், அதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மேல்விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இணையவழியில் 437 மனுக்களுக்கு தீர்வு

மேலும், கடந்த ஐந்து மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 523 மனுக்களில், 437 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்ட 173 மனுக்களில், 126 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் அளித்த 653 மனுக்களில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மனுக்கள் மீது துரித நடவடிக்கை

இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் பெறப்பட்ட ”முதல்வரின் முகவரி” மனுக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.