திருச்சி பள்ளியில் பந்தல் சரிந்து விழுந்து மாணவர்கள் காயம்

school students

பள்ளியில் நடந்த பரிசு வழங்கு நிகழ்ச்சி

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கூடத்தில் இன்று காலை நடந்து முடிந்த எஸ். எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

காற்றில் சரிந்து விழுந்த இரும்பு கம்பிகள்

இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் பின்பக்க சாமியான பந்தல் சரிந்து விழுந்தது. இதில் பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்ததில் 3 மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சில மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி காயம் அடைந்தனர். ஒரு ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பீதியும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் நாளா புறமும் மாணவர்கள் ஓடினர்.

குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்

அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் சாமியான பந்தல் போட்ட ஐந்து தொழிலாளர்களை அவர்கள் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட  கல்வி அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், இந்த சம்பவத்தால் இன்று கருகருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.