பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி..சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் சீமான்.!

seeman dtuxdg

தமிழக அரசு திட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக கடந்த மாதம் ஜன-31-ந் தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதில் மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

ஒப்புதல் வழங்க கோரிக்கை

இதனைத் தொடர்ந்து கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில் கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.

பேனா சிலை அமைக்க அனுமதி

இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கொடுத்தது. மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து, கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. 

நிபந்தனைகள்

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு நிபந்தனைகளை வழங்கியுள்ளது மத்திய சுற்றுச்சூழல் துறை. அதில், ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளை விதித்துள்ளது.  

சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் சீமான்

ஏற்கனவே, பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் அதை உடைபேன் என பேசியிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  

"கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.