தங்கம் திருடிய 2 இளைஞர்கள் - 4 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை 

theft gold recovered by police

பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த ஜோசப்(47) என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கம் போல் வேலை முடிந்து பட்டறையை பூட்டிச் சென்ற ஜோசப், மறுநாள் காலையில், வந்து பார்த்தபோது, பூட்டி உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகள், மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து அங்கு இருந்த கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். 

பல்வேறு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள்

இதைத் தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, கருவாட்டு பேட்டையை சேர்ந்த பரணிகுமார்(22), செங்குளம் காலனியைச் சேர்ந்த சரவணன் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பரணிகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்துடன் சேர்ந்து 18 வழக்குகளும், சரவணன் மீது 3 வழக்குகளும் காவல்நிலையத்தில் பதிவாகி உள்ளது. 

அதிகாரிகளுக்கு பாராட்டு 

இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு 4 மணி நேரத்தில் இருவரையும் கைது செய்து நகைகளை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதாலெட்சுமி, கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பாராட்டினார்.