ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் செல்லும் பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள்

odisha train accident

விபத்து பகுதிக்கு செல்லும் மோடி

ஒடிசா மாநிலம் பலசூர் மாவட்டம் பகனாக பஜார் பகுதியில் நேற்றிரவு நடந்த கோர ரயில் விபத்தில், இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலசூர் பகுதியில், நேற்றிரவு 3 ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி விபத்து பகுதிக்கு நேரில் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் மாநில அரசுகள்

இந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும்,  ஒடிசா பேரிடர் மீட்புப் படையும் 24 தீயணைப்பு குழுவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அங்குள்ள உள்ளூர் வாசிகளும் காயமடைந்தவர்களை மீட்க மீட்பு படையினருக்கு உதவி புரிந்து வருகின்றனர். அதனுடன், இந்த விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல், மாநில அரசுகளும் மீட்புக்குழுவை அனுப்பி வரும் நிலையில், உதவி எண்களையும், அறிவித்து வருகிறது.

விபத்து பகுதிக்கு செல்லும் மம்தா

இந்நிலையில், மேற்கும் வங்கம் சார்பில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளார். மேலும் அம்மாநிலத்தின் சார்பில் மீட்புக் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து பகுதிக்கு செல்லும் உதயநிதி

அதேபோல், தமிழக அரசு சார்பில் காயமடைந்த தமிழர்களை மீட்க விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவானது ஓடிசா விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.