தமிழகம் வரும் பிரதமர்.. காவல் துறையின் கட்டுப்பாட்டில் விமான, ரயில் நிலையம்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.! 

website post - 2023-04-08T123213

பிரதமர் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை - கோயமுத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடபுடலில்  தமிழ்நாடு பாஜக

பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்ட பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை செய்திருக்கிறது தமிழ்நாடு பாஜக. 

பிரதமரின் பயண திட்டம்

ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப்படையின் தனி விமானம் மூலம், பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை வருகிறார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அதன் பின்னர், ஐ.என்.எஸ்.அடையாறில் இருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். சென்ட்ரலில், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். 

அதன்பிறகு, மாலை 4.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கார் மூலம் மெரினா காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை மற்றும் ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிறகு, இரவு 8.45 மணியளவில் அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூரு புறப்பட்டு செல்கிறார். நாளை புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-ம் ஆண்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின்பு ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் படத்தின் நாயகர்களான பொம்மன் - பெள்ளியை சந்தித்து பாராட்டுகிறார்.

 ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.  மொத்தம் 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முந்தைய காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது Go back Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகும். ஆனால், இந்த முறை Vanakkam Modi என்ற ஹேஷ்டேக், Go back Modi என்ற ஹேஷ்டேக்கிற்கு நிகராக ட்ரெண்டாகி வருகிறது.