குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

website post (67)

நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக புகார்

தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலும் கோயில் நிகழ்ச்சிகளின்போது ஆடல் பாடல், குறவன் குறத்தி ஆட்டம், நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அவ்வாறு நடத்தப்படும் நடனங்கள் ஆபாசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் பெரும்பாலான கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில், குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. மேலும் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அதில், குறவன் குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததையடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழகத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.