புதுச்சேரி அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்.! 

pu sti

பதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனவும், அரசுப் பள்ளிகளில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். 

வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ

புதுச்சேரியைப் பொறுத்தவரை இதுவரை தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தது. வரும் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்
அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி என்று இருந்தது. இந்தநிலையில், வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்ற இருப்பதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவித்திருக்கிறது புதுச்சேரி அரசு. 

கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

இது தொடர்பாக, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 9ஆம் வகுப்புவரை CBSE பாடத்திட்டத்தினை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

பயிற்சி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வருவதால் தனியாக அதற்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மூன்றரை கோடி ரூபாய் செலவில் சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வாங்கியிருக்கிறது. மேலும், பள்ளி திறந்த நாளன்றே புத்தகங்களையும் சீருடைகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.