இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் - தலைவர்கள் சொல்வது என்ன?

tn assembly

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும். அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். 

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி - டிடிவி தினகரன் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்தப் பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆளுநரை அழைத்து அவமானப்படுத்தியுள்ளது திமுக - வானதி ஸ்ரீனிவாசன்

செய்தியாளர் சந்திப்பின்போது வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது;

இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. உரையை தயாரித்து அதை ஆளுநரிடம் வழங்கி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆளுநர் அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை பேசுவார். ஆனால் ஆளுநர் திமுக அரசு நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை. திமுக அரசு சித்தாந்தை ஆளுநர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக அரசு சித்தாந்தத்தை ஆளுநர் மீது திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு ஆளுநரை அவமதித்துள்ளீர்கள். ஆளுநரை அசிங்கப்படுத்துகிறீர்கள். ஆளுநரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள். 

ஆளுநரின் செயல் தேசியகீத அவமதிப்பாகும் - தொல். திருமாவளவன்

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து தொல். திருமாவளவன் கூறியிருப்பதாவது;

ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி வரும்13-ம் தேதி வி.சி.க சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.