ராகுல் காந்தி மேல்முறையீடு.. உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ்.!

sup

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், எதிர்மனுதாரர்கள் 2 வாரங்களில் பதில் மனு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'மோடி' சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக புகார்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர் என்று பேசியிருந்தார். இதனடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஒட்டுமொத்த 'மோடி' சமூகத்தையும் ராகுல் இழிவுபடுத்தி விட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு சூரத் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

2 ஆண்டு சிறை தண்டனை

மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்ற தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500 (அவதூறுக்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் அவரை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி. மேலும், அவருக்கு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக ஜாமினும் அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்யலாம். அதுவரை அவருக்கு இந்த சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேல்முறையீட்டு மனு -  சூரத் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி

இதையடுத்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவரின் அரசு பங்களாவும் காலி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 2 ஆண்டு சிறை தண்டனையை தடை விதிக்கக்கோரி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சூரத் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

குஜராத் உயர்நீதிமன்றம் - இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது

அதனையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தடை கோரி மீண்டும் மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் மே 2-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும்.  அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. 

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு 

இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து,  2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்த கோரும் கோரிக்கையையும் குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதேபோல், கடந்த 15-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். 

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்தநிலையில், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது, எதிர்மனுதாரர்கள் 2 வாரங்களில் பதில் மனு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகுல் காந்தி 100 நாட்களுக்கு மேல் தொகுதி பணிகளை செய்ய முடியாமல் இருக்கிறார் என்றும், ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இயலவில்லை என்றும் ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி,  குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி உள்ளிட்டோருக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.