ராகுல் காந்தி அரசியல் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை.!

website post (1) (10)

ராகுல் காந்தி 1970-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் நாள் இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் புது தில்லியில், இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ்காந்திக்கும், சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார். இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார்.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை, நியூ தில்லி மாடர்ன் பள்ளி மற்றும் டூன் பள்ளியில் தொடங்கிய அவருக்கு, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டிலிருந்தபடியே படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததும், ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் ஃபிளோரிடா மாநிலத்தில் உள்ள ரோல்லின்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் படிப்பைத் தொடர்ந்த அவர், பி.ஏ இளங்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார். பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்த அவர், ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, எம்.ஃபில் பட்டம் பெற்றார். 2002-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், மும்பையில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனத்தை நடத்திவந்தார்.

2003-ம் ஆண்டுக்கு பிறகு, அவ்வப்போது தனது தாயாருடன் பொது நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வந்த ராகுல் காந்தி அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004-ம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் 2004-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான அமேதியில் (உத்திரப்பிரதேச மாநிலம்) போட்டியிடுவதாக அறிவித்தார். ராகுல்காந்தி, தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரானார்.

பின்னர், 2004-ல் உள்விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 403 தொகுதிகளில் வெறும் 22 தொகுதிகளில்  மட்டுமே வெற்றிபெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்எஸ்யூஐ அதாவது இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பு பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதேதொகுதியில் அதாவது அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சுமார் 3,70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15-வது மக்களவைக்கு தேர்வானார். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி மனிதவள மேம்பாட்டு துறையின் நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு நெடுஞ்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தும் நிலத்திற்கு அதிக இழப்பீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் கைது செய்யப்பட்டார். 

அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த ராகுல் காந்தி 2013-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் 16-வது மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு, நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு போன்றவற்றின் உறுப்பினரானார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 30 மாவட்டங்களுக்கும் ராகுல் பயணம் செய்து பிரச்சாரம் செய்த நிலையில், 224 தொகுதிகளில் 80 தொகுதிகளில் வென்று மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்தது. பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று 17-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கட்சி.  20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தலைவர் தேர்தலில், எந்த கருத்தையும் கூறாமல் விலகி நின்ற ராகுல் காந்தி மூத்த தலைவர்களின் ஆதரவோடு மல்லிகார்ஜூன கார்கே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிளவுகள் மற்றும் 2024 பொதுத்தேர்தல் போன்வற்றை எதிர்நோக்கி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' யாத்திரை நடத்தி வலுவிழந்து கிடக்கும் இந்திய தேசிய காங்கிரஸை வலிமையடையச் செய்தார். 

இந்தநிலையில், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழும ஊழல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம். இந்த அறிக்கையால் அதானியின் சாம்ராஜ்யம் சரிந்ததுமட்டுமல்லாமல் இந்திய நாடாளுமன்றமும் நிலைகுலைந்துபோனது. அதானிக்கும் மோடிக்கும் தொடர்பிருப்பதாக அவையில் ராகுல் காந்தி பேசியது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சை கண்டித்து ஆளும் கட்சியும் அவையில் முழக்கமிட்டனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் இரு அவைகளும் 9 நாளாக முடங்கியுள்ளது. 

இந்த நிலையில், நேற்றைய தினம் (மார்ச்-23) சூரத் நீதிமன்றம் 'மோடி' என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அதிரடியாக உத்தரவிட்டது இந்திய அளவில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'எல்லா திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர் என்று பேசியிருந்ததையடுத்து அதற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது சூரத் நீதிமன்றம்.

இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கண்டனம் வலுத்தநிலையில், தற்போது வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தால் வரும் 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியின் அரசியல் பயணம் கேள்விக்குறிதானா என்ற கேள்விக்கான விடையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.