மகளிர் ப்ரீமியர் லீக் - முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி.!

website post - 2023-03-16T154635

மகளிர் ப்ரீமியர் லீக் 13-வது போட்டி

மகளிர் ப்ரீமியர் லீக் 13-வது போட்டியில் யுபி வாரியர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டி மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நேற்று (மார்ச்-15) நடைபெற்றது.  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் களமிறங்கிய  யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். யுபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

136 ரன் இலக்கு

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீராங்கனைகள் சோஃபி டெவின் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. கேப்டன் ஸ்மிருதி மந்தனா டக் அவுட் ஆனார். அதன் பிறகு களமிறங்கிய கனிகா அஹுஜா மற்றும்  ரிச்சா கோஷ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை  வெற்றி  அடையச் செய்தனர். கனிகா அஹுஜா 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார், அவருடன் இணைந்து ரிச்சா கோஷ் 31 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்து  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி

மகளிர் ப்ரீமியர் லீக் தொடங்கி 5 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி ஒரு  வெற்றி கூட  பெறாத நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதன் மூலம், ஆர்சிபி அணி தரவரிசை பட்டியலில் 4-வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது. "பிளேயர் ஆப் தி மேட்ச்" விருதை சிறப்பாக விளையாடி  46  ரன்கள் அடித்த கனிகா அஹுஜா  பெற்றார். ஆர்சிபி அணி, இனி வரும் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் உள்ளது.